×

மூவர்ணத்தில் ‘வணக்கம்’ ஜி-20 மாநாட்டு சின்னம் ரெடி

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு, ‘ஜி-20’ என்று அழைக்கப்படுகிறது. இதன் தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது.  இதன்படி, வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 2023ம் ஆண்டு நவம்பர் 20 தேதி வரை இந்தியா தலைமை தாங்குகிறது. இதையடுத்து, முதல் முறையாக இந்தியாவில் ஜி-20 மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டிற்காக சிறப்பு சின்னத்தை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது. இதற்கான சின்னத்தை பரிந்துரை செய்யும்படி மக்களுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்தது. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சின்னங்கள் அனுப்பப்பட்டன.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டுக்கான சின்னமாக, மூவர்ணத்தில் பிரதிபலிக்கும் ‘நமஸ்தே’ (வணக்கம்) சின்னம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில், இந்தியாவின் பெயர் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இடம் பெறும். இறுதி செய்யப்பட்ட சின்னம், விரைவில் வெளியிடப்படும். இந்தியா தலைமை தாங்கும் ஓராண்டில், நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட ஜி-20 மாநாடுகள் நடத்தப்படும். வங்கதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.


Tags : Tricolor , Tricolor 'Hello' G-20 summit logo ready
× RELATED 5வது குடியரசு தினவிழாவையொட்டி...